Madurai News

அடுத்த ஆண்டு வரை இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் கிடையாது?
Monday 29, Jun 2015

புதுடெல்லி, அடுத்த ஆண்டு வரை இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் நியமனம் இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பயிற்சியாளர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளட்சரின் (ஜிம்பாப்வே) பதவி காலம் உலக கோப்பையுடன் முடிவடைந்தது. அதன் பிறகு புதிய தலைமை பயிற்சியாளரை இதுவரை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமிக்கவில்லை. இந்திய அணியின் இயக்குனராக செயல்பட்ட முன்னாள் வீரர் ரவிசாஸ்திரியின் பதவி காலம், சமீபத்தில் வங்காளதேச தொடருக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் 2016-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் வரை இந்திய அணிக்கு முழுநேர புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நெருங்கிய வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இயக்குனராக சாஸ்திரி நீடிப்பார்? தற்போது இந்திய அணியின் இயக்குனராக ரவிசாஸ்திரி, உதவி பயிற்சியாளர்களாக சஞ்சய் பங்கர் (பேட்டிங்), பி.அருண் (பந்து வீச்சு), ஆர்.ஸ்ரீதர் (பீல்டிங்) ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களின் செயல்பாட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் முழு திருப்தி அடைந்துள்ளதாம். ஒரு நாள் போட்டி கேப்டன் டோனி, டெஸ்ட் கேப்டன் விராட் கோலி ஆகியோரும் இவர்களை தொடர்ந்து அப்பொறுப்புகளில் வைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே ஜிம்பாப்வே தொடருக்கு முன்பாக தலா இரண்டு ஆண்டு வீதம் இவர்களின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. முதலில் ரவிசாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தேசித்தது. ஆனால் இப்போது அவரை இயக்குனர் பொறுப்பிலேயே நீட்டித்து அணியை கவனிக்க வைக்க முடிவு செய்துள்ளது. தேவைப்பட்டால் அவரே தலைமை பயிற்சியாளர் போல் செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last